LADIES SECTION

                                                            கீழ்ப்படியுங்கள்


"மேலும் ஆதாம் வஞ்சிக்கப்படவில்லை, ஸ்திரீயானவளே வஞ்சிக்கப்பட்டு மீறுதலுக்கு உட்பட்டாள், அப்படியிருந்தும், தெளிந்த புத்தியோடு விசுவாசத்திலும், அன்பிலும் பரிசுத்தத்திலும் நிலைகொண்டிருந்தால், பிள்ளைப்பேற்றினாலே இரட்சிக்கப்படுவாள்” 1 தீமோத்தேயு 2:14,15


கடந்த மாதத்தில் ஸ்திரீகளின் அலங்கரிப்பு குறித்து சிந்தித்தோம். இந்த மாதத்தில் ஸ்திரீயானவள் வஞ்சிக்கப்பட்டவள்; ஆனாலும் அவள் இரட்சிக்கப்படுவது எப்படி என்பதைக் குறித்து சிந்திப்போம். முதல் ஸ்திரீ ஏவாள் சாத்தான் மூலம் வஞ்சிக்கப்படுகிறாள் என்பதை நாம் அறிந்து உணர வேண்டும். நாம் அனைவரும் சாத்தானால் தான் வஞ்சிக்கப்படுகிறோம். ஏவாளைப் போன்று தந்திரமான சாத்தானின் வார்த்தையைக் கேட்பதும், தேவன் சொன்ன வார்த்தையை மீறுவதும், இச்சைக்குள்ளாக சீக்கிரத்தில் அகப்படுவதும், சாத்தானின் தந்திரமான வார்த்தை நல்லதும் இன்பமானதும் என்று தானும் நம்பி, மற்றவர்களையும் அந்த நம்பிக்கைக்குள்ளாக கொண்டு வரச் செய்யவும் ஸ்திரீயானவளுக்கே முடியும். யார் யார் கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியாமல் மீறுகிறவர்களாக இருக்கிறார்களோஅவர்கள் நிர்வாணியாக இருக்கிறார்கள் என்பது உண்மை . "நிர்வாணி” என்பது தன் வாழ்க்கையில் வசனத்திற்கு முழுமையாக கீழ்ப்படியாத ஒரு அனுபவம் தான். அன்று இஸ்ரவேல் மக்கள் கர்த்தருடைய வார்த்தைக்கு முழுமையாக கீழ்ப்படியாமல் போனதினிமித்தம் தான் அவர்கள் நிர்வாணிகளாக காணப்பட்டார்கள் என்பதை நாம் அறிந்து உணர்ந்து கொள்ள வேண்டும். கர்த்தருடைய வார்த்தைக்கு முழுமையாக கீழ்ப்படியாமலிருக்கும் போது நாம் வஞ்சிக்கப்படுவது உறுதி. சீக்கிரத்தில் சாத்தானின் வலையில் சிக்கி விடுவோம் .என்பதும் உறுதி. “கீழ்படிதல்” என்பது வாழ்க்கையில் மிக மிக முக்கியமானது. புருஷன் கர்த்தருக்கும், மனைவியானவள் புருஷனுக்கும் கீழ்ப்படிய வேண்டும் என்பது கட்டளை (எபேசி. 5:24) இன்று ஸ்திரீகளுக்கு புருஷன் கீழ்ப்படிய வேண்டிய கட்டாயத்தில் நிலமை மாறிக் கொண்டு வருகிறது. அதற்கு காரணம் ஸ்திரீகள் அதிகமாக வசனம் வாசிக்கவும், தியானிக்கவும், ஆலய காரியங்களில் மிகுந்த வாஞ்சையோடும் காணப்படுகின்றார்கள். ஆனால் தேவ வசனத்திற்கு ஒரு சிறிய அளவு கூட தன் வாழ்க்கையில் முக்கியத்துவம் கொடுத்து மனப்பூர்வமாக புருஷனுக்குக் கீழ்ப்படிய அர்ப்பணிப்பது இல்லை. இப்படிப்பட்ட நிலமையில் நாம் இருந்துக் கொண்டிருப்போமானால் நாம் வஞ்சிக்கப்படுவது மிக மிக எளிதானது. இதனால் நாம் பரலோகராஜ்யத்தின் மேன்மையை இழந்து விடுவோம் என்பது நிச்சயம். இன்றைக்கு அநேக ஸ்திரீகள் தேவமகிமையைப் பெற்றவர்கள் போன்று தேவனை ஆராதிப்பதும், போதிப்பதும் பலவிதத்தில் ஊழியங்களை செய்கின்றவர்களாகவும் காணப்படுகின்றார்கள். ஆனால் அவர்களால் வசனத்திற்கு முழுமையாக கீழ்ப்படிய முடிகிறதா என்பது கேள்வியாகவே காணப்படுகிறது. ஸ்திரீயானவள் ஜெபம் செய்யும் போது தன் தலையை மூடிக் கொள்ள வேண்டும் என்பது வேதத்தின் கட்டளை (1 கொரி11) ஆனால் அதற்குக் கூட கீழ்ப்படியாதவர்கள் தான் தேவமகிமையை பெற்றவர்களாக ஊழியம் செய்கின்றார்கள். ஸ்திரீ தன் தலையை மூடிக்கொள்ள வேண்டாம் என்று நினைப்பது சாத்தானால் வஞ்சிக்கப்பட்டாள் என்பதற்கு அடையாளம். திருமணத்தின் போது ஸ்திரீ (மணமகள்) தலையில் முக்காடு போடுவது புருஷனுக்கு கீழ்ப்படிவேன் என்பது பொருள். ஆனால் இன்று திருமணத்தின்போது தலையில் முக்காடு போடாமல் தலையின் பின் பாகத்தில் அந்த முக்காடு (Net) தொங்க விடுகின்ற நிலமைக்கு நம்முடைய கிறிஸ்தவ சமூகம் மாறிவிட்டது என்பதை ஒவ்வொரு திருமண நிகழ்ச்சியில் நம்மால் பார்க்க முடிகின்றது. இந்த செயல் புருஷனுக்கு ஸ்திரீயாகிய நான் கீழ்ப்படிய மாட்டேன் என்பதை காட்டுவதாகவே தெரிந்தும் தெரியாமல் காணப்படுகிறது என்பது உண்மை. இன்று உண்மையிலே குடும்ப வாழ்க்கை இப்படியாகத்தான் காணப்படுகின்றது. இன்று ஸ்திரீகள் தலையில் முக்காடு போடுவதை அலங்கார பொருளாக மாறியது சாத்தானின் வஞ்சகமான சூழ்ச்சியே. இந்தக் காரியத்தில் ஸ்திரீ வஞ்சிக்கப்பட்டாள் என்பது உண்மை . ஏனென்றால் அவர்கள் கர்த்தருடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படியாமலிருக்க வேண்டும் என்பது சாத்தானின் சதி. ஆகவே நம் வாழ்க்கையில் பலவிதமான சாத்தானின் தந்திரமான சூழ்ச்சிகள் நடந்தேறுகின்றது என்பதை நாம் உணர்ந்து வஞ்சிக்கப்படாமல் எச்சரிக்கையாயிருக்க வேண்டும்.. வஞ்சிக்கப்பட்ட ஏவாள் மீறுதலுக்கு உட்பட்டாள். நாம் சாத்தானால் வஞ்சிக்கப்பட்டோம் என்றால் கர்த்தருடைய வார்த்தையை மீறினோம் என்பது உண்மை . இன்று அநேக ஸ்திரீகள் பல விதத்தில் வஞ்சிக்கப்பட்டு கர்த்தருடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படியாமலிருக்கின்றதைத்தான் காணமுடிகின்றது. நாம் கர்த்தருடைய சமூகத்தில் மனந்திரும்பி வரும்போது நாம் பிள்ளைப்பேற்றினால் இரட்சிக்கப்படுகிறோம் என்பதை அறிந்து உணர வேண்டும். அதற்கான கிரியைகள் நம் வாழ்க்கையில் காணப்பட வேண்டும் என்பதும் முக்கியமானதாகும். வேதத்தில் நாம் மூன்று கிரியைகளில் நிலைக் கொண்டிருந்தால் பிள்ளைப்பேற்றினால் இரட்சிக்கப்படுவோம் என்று கூறுகிறது. இதைக் குறித்து நாம் சிந்திப்போம்.


I. தெளிந்த புத்தியோடு விசுவாசத்திலும்


 நம் கிரியைகளில் தெளிந்த புத்தியோடு கூடிய விசுவாசம் வேண்டும். "தெளிந்த புத்தி என்பது நம் செய்கைகளெல்லாம் பேச்சு, பார்வை, சிந்தனை, நடத்தை தேவனுடைய பார்வைக்கு நீதியானதாகவும், விருப்பமானதாகவும் இருப்பது தான். அவ்வாறு நாம் ஒவ்வொரு நொடி பொழுதிலும் காணப்படுவோமானால் இரட்சிக்கப்படுவது உறுதி. தெளிந்தபுத்தி இல்லாதவர்கள் கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியாதவர் களாகவே காணப்படுவார்கள். இதனால் வஞ்சிக்கப்படுவதும் உறுதியே. நமக்கு தெளிந்த புத்தியில்லை என்றால் மற்றவர்களின் தந்திரமான போதனையினாலும், அடையாளங்களினாலும், நயவசனிப்பினாலும், இச்சகப் பேச்சியினாலும் இன்னும் அநேக காரியங்களினால் நாம் எளிதில் வஞ்சிக்கப்படுவோம் என்பது உண்மை. ஆகவே நாம் தெளிந்த புத்தியுள்ள விசுவாசத்தில் நிலைக்கொண்டிருந்தால் சாத்தானின் வஞ்சகமான வலையில் விழுந்து விடாமல் இரட்சிப்பைப் பெற்றுக் கொள்ள முடியும். ஆகவே ஸ்திரீகளாகிய நாம் எப்படி காணப்படுகிறோம்? வஞ்சிக்கப்பட்டு மீறுதலுக்கு உட்பட்டிருக்கிறோமா? சிந்தித்து உணருங்கள்


II. அன்பிலும்:


அன்பு, அதற்கு ஈடாக எதையுமே ஒப்பிட முடியாது. அன்பைக் குறித்து நாம் அதிகமாக அறிய வேண்டுமானால் 1கொரி. 13-ம் அதிகாரத்தை முழுமையாக வாசித்து சிந்திக்கும் போது அதின் ஆழத்தை உணர முடியும். நம்மிடம் உண்மையான அன்பு இருக்குமானால் நாம் சீக்கிரத்தில் வஞ்சிக்கப்படமாட்டோம். நாமும் மற்றவர்களை வஞ்சிக்கமாட்டோம். இன்று அன்பு முழுமையாக குறைந்து எனக்கு என் குடும்பம், என் பிள்ளைகள், என் சபை, என் ஊழியக்காரர் என்று இப்படியாக ஒதுங்கிவிட்டது. அன்பு இல்லாத காரணத்தினால் மற்றவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை முற்றிலும் அழிந்துவிட்டது. யாராவது நமக்கு உதவி செய்வது போன்று வந்து, பின்பு செய்த உதவிக்கு பணத்தைத்தான் கேட்கின்றார்கள். இப்படியாக அடுத்த வீட்டு உதவி கூட எதிர்ப்பார்க்க முடியாத நிலமை வந்துவிட்டது. ஒருவன் விழுந்து கிடந்தால் கூட அவனை தூக்கிவிட மனதில்லாதவர்கள் தான் நம் கிறிஸ்தவ மக்கள். அவர்கள் அன்பைக் குறித்து அதிகமாக பேசுவார்கள். ஆனால் அது மற்றவர்கள் முன்பு காட்டும் ஒரு நாடகமாகவே மாறிவிட்டது. இன்றைக்கு அன்பினாலே வஞ்சிக்கின்றவர்களைப் பார்க்க முடிகிறது. அன்பு என்பது உலகத்தில் காண்கின்றதல்ல என்பதை உணர்ந்து உண்மையான அன்பில் நாம் நிலைக்கொண்டு அதினால் இரட்சிப்பைப் பெற்றுக் கொள்வோம் நம்முடைய அன்பு எப்படிப்பட்டது சிந்தித்து உணருங்கள்.


111. பரிசுத்தத்தில்:


வேதம் கூறுகிறது, "பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே” என்று எபி. 12:14) ஆகையால் நாம் தேவனை தரிசிக்க (or) இரட்சிப்பைப் பெற்றுக் கொள்ள நம் வாழ்க்கையில் பரிசுத்தம் மிக மிக முக்கியமானதாகும். "பரிசுத்தம்” என்பது நம்முடைய கிரியைகள் பார்வை, பேச்சு, சிந்தனை, நடத்தை, இலட்சியம் அனைத்தும் தேவனுக்கு உகந்ததாக காணப்பட வேண்டும். அவ்வாறு நாம் காணப்படும் போது வஞ்சிக்கப்படாமலிருக்க கர்த்தர் கிருபைச் செய்வது உறுதி. ஆனால் நமக்கு பரிசுத்தத்தில் பூர்ணமாக நிலைகொண்டிருக்க முடியாமல் போகிறது என்பதும் உண்மை . ஆனாலும் சிலர் வெளி வேஷத்திற்கு வெள்ளை ஆடைகளை அணிந்தும், இன்னும் சிலர் வெளி செய்கைகள் மூலம் மிகுந்த பரிசுத்தவான்கள் போன்றும் காட்டிக் கொள்ளுவார்கள். பரிசுத்தம் வெளித்தோற்றமல்ல, அது அகத்தின் அழகு (or)அகத்தின் தூய்மை . ஒரு புருஷன் (or) ஸ்திரீநான் பரிசுத்தவான் என்று மெச்சிக் கொள்ளுவதல்ல. மற்றவர்கள் கூற வேண்டும். இவன் (or) இவள் பரிசுத்தவான் என்று. அதுபோன்று தேவனும் நம்மை பரிசுத்தவான் என்று காண வேண்டும். வேதத்தில் சூனேமியாள் ஸ்தீரி தன் புருஷனிடத்தில் தேவனுடைய மனுஷனாகிய எலிசாவைக் குறித்து சாட்சி கூறும்போது “இதோ நம்மீடத்தில் எப்போதும் வந்து போகிற தேவனுடைய மனுஷனாகிய இவர் பரிசுத்தவான் என்று காண்கிறேன்” என்று (11 இராஜா. 4:9) இப்படிப்பட்ட சாட்சி நம்மிடத்தில் காணப்படுகின்றதா? பரிசுத்தத்தில் நிலைக் கொண்டிருக்கின்றோமா? சிந்தித்து உணருங்கள். ஸ்திரீயானவளே வஞ்சிக்கப்பட்டு மீறுதலுக்கு உட்படுவாள் என்பது வேதத்தின் மூலம் நாம் அறிந்த உண்மை . அப்படியிருந்தும் சொல்லப்பட்ட மூன்று காரியங்களின் இரகசியத்தையும் நாம் அறிந்து உணர வேண்டும். அதோடு வேறொரு இரகசியத்தையும் நாம் அறிந்துக் கொள்ள வேண்டும். ஸ்திரீயானவள் வஞ்சிக்கப்பட்டு மீறுதலுக்கு உட்பட்டிருந்தாலும் இந்த மூன்று கிரியைகளில் நிலைக்கொண்டிருக்கும் போது பிள்ளைப்பேற்றினால் இரட்சிக்கப்படுவாள் என்று சொல்லப்பட்டுள்ளது. அதாவது புருஷனோடு முக்கியமாக வாழும் போது மட்டுமே பிள்ளைப்பேற்றின் பாக்கியத்தை பெற்றுக் கொள்ள முடியும். அப்படியென்றால் குடும்ப வாழ்க்கைக்கு தெளிந்த புத்தியோடு விசுவாசம், அன்பு, பரிசுத்தம் கற்பு இவைகள் கண்டிப்பாக தேவை என்பதை நாம் அறிந்து உணர வேண்டும் அப்படி யானால் மட்டுமே குடும்ப வாழ்க்கை மேன்மையானதாகவும்பாக்கியமுள்ளதாகவும் காணப்படும். நாம் இன்னும் அநேக காரியங்களில் வஞ்சிக்கப்படாமல் இருக்க வேண்டும் நீங்கள் கற்றுக்கொண்ட உபதேசத்திற்கு விரோதமாய்ப் பிரிவினை களையும் இடறல்களையும் உண்டாக்குகிறவர்களைக் குறித்து எச்சரிக்கை யாயிருந்து அவர்களை விட்டு விலக வேண்டுமென்றும், அப்படி பிரிவினைகளையும் இடறல்களையும் உண்டாக்குகிறவர்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு ஊழியம் செய்யாமல் தங்கள் வயிற்றுக்கே ஊழியஞ்செய்து, நயவசனிப்பினாலும் இச்சகப்பேச்சினாலும், கபடில்லாதவர்களுடைய இருதயங்களை வஞ்சிக்கிறவர்களாயிருக்கிறார்கள் (ரோம். 16:17,18). இப்படிப்பட்டவர்களின் வலையில் சிக்கிவிடாதப்படி நாம் எச்சரிக்கையாயிருக்க வேண்டும். இன்னும் நாம் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுக்காமலிருக்க வேண்டும்செவி கொடுத்தால் விசுவாசத்தை விட்டு விலகிப் போகிற வலைக்குள் சிக்கிவிடுவோம். (தீமோ. 4:1). ஆகையால் வஞ்சிக்கப்படாமல் எச்சரிக்கையாயிருங்கள். நாம் வஞ்சிக்கப்படா மலிருக்க வேதம் கூறுவது போன்று நாம் இனிக் குழந்தைகளாயிராமல் மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுள்ள போதகமாகிய போதகத்தில் அடிபட்டு அலைகிறவர்களாயிராமல் எச்சரிக்கையாயிருக்க வேண்டும் இப்படியே அநேக காரியங்களை சொல்லிக் கொண்டே போகலாம். வஞ்சிக்கப்படாமல் எச்சரிக்கையாயிருக்க தேவன் விரும்பும் கிரியைகளில் நிலைகொண்டிருங்கள் பரிசுத்தமாக, அன்பாக, தெளிந்தபுத்தியோடு விசுவாசத்திலும் வாழ தேவன் தாமே நம்மனைவருக்கும் கிருபைச் செய்து மேலான இரட்சிப்பை பெற்றுக் கொள்ள அருள் புரிவாராக. ஆமென்.


                                                                      ஹெலன் ஷீன், கேரளா. cell: 09947301633


 


                                                             பாவங்கள்


என் ஜனத்துக்கு அவர்கள் மீறுதலையும், யாக்கோபின் வம்சத்தாருக்கு அவர்கள் பாவங்களையும் தெரிவி (ஏசாயா 58:1)


         தேவ கற்பனைகளையும், அவருடைய வார்த்தைகளையும் மீறுவதே பாவம். அன்பானவர்ககளே, நம் வாழ்க்கையில் எப்படியெல்லாம் பாவம் கடந்து வருகின்றது என்பதை குறித்து கடந்த சில மாதங்களாக நாம் சிந்தித்து வருகின்றோம். இந்த மாதமும் மத். 7-ம் அதிகாரத்தில் இயேசு தம்முடைய சீஷர்களுக்கு கொடுத்த சில உபதேசங்களைக் குறித்து சிந்திப்போம்.


         மனிதனுடைய இயல்பு வாழ்க்கையில் நாம் செய்கின்ற அநேக காரியங்கள் தேவனுடைய பார்வையில் பாவமானது என்பதைக் குறித்துள்ள எச்சரிப்பை இவ்வசனங்களில் நாம் பார்க்க முடிகின்றது. மற்றவர்களிடம் காணப்படுகின்ற குறைகளையும், குற்றங்களையும் கண்டுபிடிப்பதிலும் தங்களுடைய குறைகள் மறைப்பதற்காக மற்றவர்களை குற்றவாளிகளாக தீர்ப்பதிலும் மிகவும் ஆர்வமுள்ளவர்களாக காணப்படுவர். ஒருவருடைய தவறை சுட்டிக் காட்டுவதல்ல. அவரை குற்றவாளி என்று தீர்ப்பதில் இன்றைய சமூகமும், ஊடகங்களும் மிகவும் ஆர்வமாக காணப்படுகின்றனர். எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறது போல் எங்களுக்கும் மன்னியும் என நாள்தோறும் ஜெபம் செய்துவிட்டு ஒருவரையும் மன்னிக்கிறதில்லையே, மனிதன் ஒருவருக்கொருவர் பொறாமையும், எரிச்ச லுமுடையவர்களாகதானே காணப்படுகின்றனர். அன்பானவர்களே மத். 7-ம் அதிகாரம் முதலாம் வசனத்தின் வழியாக இயேசு தம்முடைய சீஷர்களுக்கு வரவிருக்கும் நியாயத்தீர்ப்பை குறித்து எச்சரிக்கிறார். எப்படியெனில் நியாயத்தீர்ப்பின் நாளிலே மனிதர்களாகிய நாம் குற்றவாளிகளாதபடிக்கு இப்போது நாம் உயிரோடிருக்கும் நாட்களில் மற்றவர்களை, நமக்கு எதிராக செயல்படு கின்றவர்களை, எதிராக பேசுகின்றவர்களை, நம்மோடு ஒத்துப் போகாதவர்களை மனப்பூர்வமாய் மன்னிக்கவும், அவர்களோடு ஒப்புரவாகவும், நாம் நீடிய பொறுமையுள்ளவர்களாய்க் காணப்பட வேண்டுமென்றும் மற்றவர்களை குற்றவாளிகளாக்காதபடிக்கும் எச்சரிக்கையாயிருக்க வேண்டுமென்று குறிப்பிடுகிறார். பாவம் நிறைந்த உலகத்திலே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அனைத்தும் (பார்வை, பேச்சு, சிந்தனை, கேள்வி, செயல்கள்) பாவமாக இருப்பதினால் சரியென தெரியாமல் வாழ்கின்றோம். மற்றவர்கள் செய்வதை விடவும் அதிகமான தவறுகளையும், மீறுதல்களையும் நாம் செய்கின்றோம். இதில் ஒரு பகுதியாகத் தான் நாம் மற்றவர்களை குறை கூறி வாழ்ந்து வருகின்றோம். மத். 7:2 கூறுகையில் நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள். நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும் என்கிறார். நம்மில் சுயநலம் அதிகமானாலே மற்றவர்களைக் குறித்துள்ள சிந்தனை மிகவும் இழிவானதாகவும் மற்றவர்களை குற்றம் கண்டுபிடிக்கும் எண்ணத்தோடும் கூடியதாகும். நாம் மற்றவர்களை எப்படி எடை போடுகிறோமோ, அதே அளவு நம்மையும் எதிர்நோக்கியிருக்கிறது என்பதையும் மறந்து விடாதீர்கள். அன்பானவர்களே நாம் மற்றவர்களிடம் காட்டுகின்ற மாயமற்ற அன்பு, பரிவு, இரக்கம், தயவு இவைகளின் அளவுக்கு சரிசமமாக நமக்கும் அளந்து தரப்படும். தேவனிடத்திலிருந்து நியாயத்தீர்ப்பின் நாளில் கிருபை பெற வேண்டுமானால் நாம் உயிரோடிருக்கும் நாளில் மனப்பூர்வமாய் அதை மற்றவர்களுக்கு செய்தே ஆக வேண்டும். நம் சிந்தனைகளையும் செயல்களையும் சீர்தூக்கிப் பார்க்க கடவுள் மற்றொரு தருணம் கூட இப்பொழுது தந்திருக்கிறார். நம் அளவுகள் மறுமையில் நித்திய வாழ்வைப் பெறுவதற்கு போதுமானதாக இருக்கின்றதா? தேவனுக்கு முன்பாக நிற்கும் நாளில் அளவுகளில் எதுவும் கூட்டவோ குறைக்கவோ முடியாதே. அதே அளவின்படிதானே திருப்பித் தரப்படும். அதை நம்மை இரட்சிக்க போதுமானதாக உள்ளதா? சிந்திப்பீர். உலகத்திலே நம்மை விசுவாசிகளாக அழைத்தது கர்த்தருடைய சித்தம் செய்யவே. அவர் காண்பித்து போன மாதிரியை நாமும் மற்றவர்களுக்கு வாழ்ந்து காண்பிப்பதற்காகவே. ஆனால் மனிதன் சுயநலத்திற்காகவும் உலகத்திற்காகவும் மட்டும் வாழும் போது கடைசியிலே நியாயத்தீர்ப்பின் நாளிலே, அளவுகள், கணக்குகள், எதிர்ப்பார்ப்புகள் அனைத்தும் வீணாய் போய்விடுமே. ஆதலால் உணர்ந்து மனந்திரும்பி மிகவும் ஜாக்கிரதையுள்ளவர்களாகி வாழுவோம். கர்த்தர் அதற்கு கிருபை புரிவாராக. ஆமென். |


                                                                      சகோ . ஷீன் சைரஸ், கேரளா. cell: 09447735981