கிறிஸ்து இயேசுவுக்குள் அருமையான வாசகர்களுக்கு, என் அன்பின் வாழ்த்துக்கள். புதிய கல்வி ஆண்டுக்குள்ளே புகுந்துள்ளோம். புது புது பாதைகளில் செல்ல இருக்கின்றோம். கர்த்தர் தாமே திருவுளம்பற்றுகின்றார், இருக்கிறவரும், இருந்தவரும், வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர் என்று. அவரே அல்பாவும் ஒமெகாவும் ஆதியும் அந்தமுமாயிருக்கின்றார். அவர் நமக்காக எப்பொழுதும் இருக்கின்றார் என்பதே இதன் பொருளாகும். Jesus always has time for us. வெளி 1:8. இன்று நாம் எல்லா விஷயங்களிலும், வெகு சுறுசுறுப்பாய் செயல்படுகின்றோம். அப்படியிருந்தும் அநேக காரியங்களில் தாமதம் ஆகிவிடுகின்றோம். ஆனால் இயேசு கிறிஸ்து அப்படி இல்லையே. தாமதம் ஆகிவிட்டது என்று அவர் தம் வாழ்நாளில் எதிலும் அறியப்படவில்லையே. அக்கரைக்குப் போவோம் என்று தம் சீஷர்களுக்கு அழைப்பு கொடுத்து படகிலே சென்ற போது, தன் களைப்பினால் அவர் அந்த படகிலே தூங்கினார். அன்று இரவில் பெருங்காற்று வீசி கடல் பொங்கினாலும் கர்த்தர் அவர்களோடேதான் இருந்தார். ஆனால் சீஷர்களோ கலக்கமடைந்தார்கள். ஆண்டவரை எழுப்பினார்கள். காற்றும் கடலும் அமர்த்தப்பட்டது. அன்றைய பயணம் கலிலேயாவிலிருந்து கதரேனுக்கு, ஒரு முழு இரவு பயணமாகும். கதரேனுக்கு தேவன் பயணப்பட்டு வந்தது இதுவரையிலும் அறிமுகப்படுத்தப்படாத அசுத்த ஆவி பிடித்த ஒருவனை சுகப்படுத்தவே. அவன் சுகமடைந்தான். உடன்தானே திரும்பி கலிலேயாவுக்கு வந்தார். இங்கே திரளான ஜனங்கள் அவருக்காக காத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுள் ஜெபஆலயத்தலைவனாகிய யவீரு என்பவன் தன் 12 வயது மகளுக்காக, மரண அவஸ்தையிலிருந்து மீட்க, தன் வீட்டிற்கு வர வேண்டினான். ஆண்டவர் தாமே செல்கையில் வழியிலே 12 வருடங்களாக பெரும்பாடுள்ள ஒரு ஸ்திரி, யாவராலும் கைவிடப்பட்ட நிலமையில், யாரும் அறியாதபடி, ஆண்டவரின் வஸ்திரத்தின் ஓரத்தையாகிலும் தொட்டால் தனக்கு சுகம் கிடைக்கும் என்று விசுவாசித்து தொட்டாள். தேவனிடமிருந்து ஒரு வல்லமை புறப்பட்டு அவளை அங்கேயே சுகப்படுத்தினது. ஆண்டவர் கூட்டத்தாரை நோக்கி என்னைத் தொட்டது யார்? என்று கேட்க, இதனால் சற்று காலம் தாமதம் ஆகியது போல் காணப்பட்டது. அதற்குள்ளாகவே யவீரு வீட்டார் வந்து போதகரை வருத்தப்படுத்த வேண்டாம். அவன் மகள் மரித்துவிட்டாள் என்று அறிவிக்கப்பட்டது. ஆண்டவர் எவ்விஷயத்திலும் எவருக்கும் தாமதம் ஆவதே இல்லை. நமக்கு தாமதம் போல் காணப்பட்டாலும் ஆண்டவருக்கு ஒருபோதும் தாமதம் அல்லவே அல்ல. Jesuis always has time for us. அவர் எப்பொழுதும் நமக்காகவே இருக்கின்றார். இயேசு தாமே அவள் மரித்துவிட்டாள் என்ற செய்தியை கேட்டு யவீருவைப் பார்த்து பயப்படாதே, விசுவாசமுள்ளவனாயிரு. அப்பொழுது அவள் இரட்சிக்கப்படுவாள் என்றும் அவள் மரிக்கவில்லை, நித்திரையாயிருக்கிறாள் என்றார். இதனைக் கேட்ட அனைவரும் சீஷர்களில் பலரும் நகைத்தார்கள். ஆண்டவர் அவர் வீட்டில் வந்த போது, பேதுரு, யாக்கோபு, யோவான், பெண்ணின் தாய், தந்தை தவிர வேறொருவரையும் வீட்டிற்குள் வரவொட்டாமல் நகைத்தவர்கள் யாவரையும், சீஷர்களையும் அவர் வெளியே போகப்பண்ணி, மரித்ததாக அறிவிக்கப்பட்ட பிள்ளையை உயிர்பிழைக்கச் செய்தார். ஆண்டவரின் தாமதம் எப்பொழுதும் தேவ மகிமைக்கே. இங்கே ஏன் ஆண்டவர் பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகிய 3 சீஷர்களை மாத்திரம் வீட்டிற்குள்ளே அழைத்து சென்றார். ஆண்டவரை சுற்றி ஏராளமான சீஷர்கள் காணப்பட்டாலும், மறுரூப மலைக்கோ, கெத்சமனே தோட்டத்திற்கோ ஆண்டவரோடு அழைத்து செல்லப்பட்டவர்கள் இந்த 3 சீஷர்கள் மாத்திரமே. வேதத்திலே பேதுரு கூறியதாக, யாக்கோபு பேசியதாக, யோவான் பேசியதாக என்று அநேக காரியங்களில் இம்மூவரையும் அன்னார் பெயரோடு கூட அறிகின்றோம். மற்ற சீஷர்கள் பேசும்போது, அன்னார்களின் பெயர் அறியப்படாமல் ஒட்டு மொத்தமாக சீஷர்கள் கூறினார்கள் என்று தானே வாசிக்கின்றோம். அருமையானவர்களே, தேவனுடைய பிள்ளைகளாக, சீஷர்களாக, ஊழியர்களாக அழைக்கப்படுவதினால் சிறப்பு ஒன்றுமில்லை . ஆண்டவரின் நெருக்கமான ஐக்கியத்திற்குள் உட்பட்டவர்களாகவும், ஆண்டவரால் எப்பொழுதும் விரும்பப்படத்தக்கவர்களாகவும் நம்மை ஆண்டவரோடு பெயர் சொல்லி அழைக்கப்படுகின்றவர்களாகவும் நாம் காணப்படவேண்டும். இல்லாவிட்டால் ஆண்டவர்தாமே அற்புதங்களை நடப்பிக்கின்ற போது, அவரோடுள்ள ஸ்தானத்தில் இருந்து வெளியேற்றப்படுபவர்களுள், ஊழியர்களுமாய், சீஷர்களுமாய், விசுவாசிகளுமாய் காணப்படுவோமானால் யாவர் முன்பாகவும் தலைகுனியவேண்டியது ஆகுமே. அன்னார்கள் வெளியேற்றப் படாதிருக்கையில் அற்புதங்கள் நடைபெற வாய்ப்பு இல்லையே. இவர்கள் தாமே தம் வாழ்க்கையில் எந்த அற்புதங்களையும் நடப்பித்து காண்பிக்க அறியாத விசுவாசிகள் மாத்திரமே ஆவர். ஆகையால் தான் ஆண்டவர்தாமே, தாம் நேசிக்கின்ற தம் பிள்ளைகளைப்பார்த்து எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள், இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள், எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள். அப்படி செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்து தேவனுடைய சித்தமாயிருக்கிறது என்று எழுதப்பட்டுள்ளதை வேதத்திலே வாசிக்கின்றோம். இடைவிடாமல் ஜெபிப்பது என்பது குடும்பஜெபம் செய்வது மட்டும் அல்ல அல்லது ஆலயத்திற்கு சென்று 2, 3 வேளைகளில் ஜெபிப்பது மட்டுமல்ல, உபவாச கூடுகையில் ஜெபிப்பது மட்டுமல்ல 24/7 எந்தநேரமும் ஜெபபிரசன்னத்தில், தேவனோடு உறவாடுதலே இடைவிடாமல் ஜெபிப்பதாகும். இடைவிடாமல் சுவாசிக்கின்றோமே. அது பாரமானது அல்லவே. அதுபோன்றே இடைவிடாமல் ஜெபிப்பதும் பாரமான காரியம் ஆகாதே. புருஷன் மனைவி இருவருமாய் ஏகமனதாய் ஒருமித்து இருப்பதை போன்று இடைவிடாமல் ஜெபத்தில் தேவனோடு ஐக்கியப்பட்டு காணப்படவேண்டுமே. பரலோகத்திலே நித்திய காலமாய் ஆண்டவரோடு ஐக்கியப்பட்டுக்கொண்டே இருக்கப்போகின்றோமே. இதனை இப்பூமியிலே வாழ்க்கையில் அன்றாட அனுபவமாய் கொண்டிராதவர்கள் பரலோகில் தேவனோடு எங்ஙனம் நித்தியகால ஐக்கியம் கொள்ளக்கூடும். வாழ்க்கையில் சம்பவிக்கின்ற எல்லாவற்றிலேயும், (தாங்கள் பெறும் யாவற்றிற்காகவும் அல்ல) ஸ்தோத்திரஞ்செய்யும் அனுபவம் வேண்டுமே. இவ்விதமான ஜெபவாழ்க்கை இல்லாததினால் நீங்கள் விண்ணப்பம் பண்ணாமலிருக்கிறதினாலே தாங்கள் அடையும் சகலவற்றிலும்) உங்களுக்கு சித்திக்கிறதில்லையே என்று யாக். 4:2 யில் வாசிக்கின்றோம்.அநேக காரியங்களை பெற்றும் அடைந்தும் அவைகளில் வெற்றி/சித்தி பெறாமல் வீணாகிவிடுகின்றதே, செலவாகி போகின்றதே. பொத்தலான பைகளில் போட்டதாக ஆகிவிடுகின்றதே. பழைய துருத்திகளில் சேர்த்ததாக மீதம் அடையாமல் குறைவுபட்டுவிடுகின்றதே. ஆனால் ஆண்டவர் நல்ல நல்ல காரியங்களை நமக்கு அளிக்க கைநீட்டி தருகையில், நாமும் நம் கைகளை அவ்வேளைகளில் கைநீட்டி ஜெபத்தில் பெறத் தவறுகிறதினால் அவைகளில் நாம் சித்தியடைகிறதில்லை. இடைவிடாமல் விண்ணப்பம் ஏறெடுக்கின்றவர்கள் தேவனிடம் தங்கள் செவியை சாய்த்து கேட்கிறவர்களாவார்கள் ஏசா. 55:3. தேவனும் அன்னார்களின் ஜெபங்களை அன்னார்களிடமாய் சாய்ந்து அன்னார்களின் கூப்பிடுதலை கேட்கின்றவருமாயிருக்கின்றார். சங். 40:1. இவர்கள் மாத்திரமே பொறுமையோடே விழித்திருந்து ஜெபிக்கின்றவர்கள் என்ற பெயரினை பெறுவர். இவர்கள் செய்வதெல்லாம் வாய்க்குமே. இவர்களே தங்கள் வாழ்க்கையில் தினமும் அற்புதங்களை மட்டுமே காண்கின்றவர்களாவர். இவ்வகையான உயர்வான மேன்மையான கிறிஸ்தவ வாழ்க்கையினையே நாம் பெற்றிடுவோமாக. தேவன் தாமே நம்மனைவரையும் இம்மாதத்திலே அதிகமதிகமாய் ஆவிக்குரிய சிந்தையுள்ளவர்களாக (God's Mind) மாற்றி ஆசீர்வதித்திடுவாராக. ஆமென்
(PHILIP JEYASINGH) ஆசிரியர்