“உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிக்கிறது.” சங்கீதம் 119:105
மேலே கூறப்பட்ட வசனம் சங்கீதக்காரனாகிய தாவீது தன் அனுபவத்திலிருந்து உணர்ந்து கூறியதாகும். இன்றையக் காலக்கட்டத்தை நாம் எடுத்துக் கொள்ளும் போது எல்லோரும் படிக்கத் தெரிந்தவர்கள். ஆகையால் வேதம் வாசிக்கின் றவர்களும் அதிகமாக தான் காணப்படுகின்றார்கள். அதுமட்டுமல்லாமல் வேதத்தை வாசிப்பதிலும், தியானிப்பதிலும், போதிப்பதிலும் கருத்துக்களை சொல்லுவதிலும் வசனத்தைக்குறித்து ஆராய்வதிலும், எழுதுவதிலும் மிகவும் தேர்ச்சிப் பெற்ற வர்களே! ஆனாலும் வசனம் நம் வாழ்க்கையில் கிரியைச் செய்கின்றதா? என்று சிந்திப்போமானால்; அநேகர் வாழ்க்கையில் இல்லையென்று தான் சொல்ல வேண்டும். வசனங்களை வாசிப்பதிலும் தியானிப்பதிலும், போதிப்பதிலும் வயது சென்ற அனுபவமுள்ளவர்களாக இருந்தால் கூட இன்னும் பாலை உண்ணத் தக்கவர்களாகவே குழந்தைக்கேற்ற அறிவுள்ளவர்களாய் சிந்திப்பதிலும், போதிப் பதிலும், ஊழியத்திலும் காணப்படுகின்றார்கள். ஆனாலும் அப்படிப்பட்ட அனுபவம் நம்மை பரலோக ராஜ்யத்திற்கு தகுதியுள்ளவர்களாக்கும் என்ற நம்பிக்கையும் கொண்டுள்ளார்கள். வசனம் நம் கால்களுக்குத்தீபமாகவும், பாதைக்கு வெளிச்ச மாகவும் காணப்பட வேண்டுமானால் நாம் பாலை உண்ணத்தக்கவர்களாக இருந்தால் போதாது. கடினமான (பலமான) ஆகாரத்தை உண்ணத்தக்கவர் களாயிருக்க வேண்டும். அது மிகவும் லெகுவானதல்ல. எளிதில் சீரணிக்க கூடியதல்ல. எளிதில் வாழ்க்கையில் பழக்கப்படுத்தகூடியதல்ல. ஆனால் முயற்சி செய்தால் நன்மையைக் கண்டடையலாம். நாம் சிந்திப்பதற்கு எடுத்துக் கொண்ட வசனத்தில் சொல்லப் பட்டவற்றை மூன்றாக பிரித்து சிந்திப்போம்.
1. வசனம்
வேதத்தை நாம் வாசிப்பதினாலோ, தியானிப்பதினாலோ மனப்பாடம் செய்வதி னாலோ மற்றவர்களுக்கு வசனத்தைக் குறித்து சொல்லுவதினாலோ அது நம் கால்களுக்குத் தீபமாகவும் பாதைக்கு வெளிச்சமாகவும் காணப்படுமா? சிந்தியுங்கள். அப்படி ஒரு போதும் காணப்படாது. சங்கீதக் காரனாகிய தாவீது கூறுவது போன்று உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படி, என் கண்களைத் திறந்தருளும். (சங்.119:18) அப்படியாக நம்முடைய கண்கள் பார்க்கும்படி நம்முடைய மனகண்கள் (அகக்கண்) திறக்க வேண்டும். ஒரு சபையை மட்டும் சார்ந்து சிந்திப்ப வர்களுக்கு வேதத்தின் அதிசயங்களை காண முடியாது. ஆனால் வேதாகமத்தை மட்டும் சார்ந்து சிந்திப்பவர்களுக்கு வேதத்தின் அதிசயங்களைப் பார்க்க கண்கள் திறக்கும். அப்படிப்பட்டவர்கள் வசனத்தை உணர்ந்து கொள்ளுவார்கள். அதுமட்டு மல்லாமல் எரேமியா தீர்க்கத்தரிசி கூறுவது போன்று உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட் கொண்டேன். உம்முடைய வார்த்தைகள் எனக்குச் சந்தோஷமும், என் இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாயிருக்கிறது. (எரே.15:16) என்று. அது போன்று நாமும் வசனத்தை உட்கொள்ள வேண்டும். வேதாகமம் சொல்லுகிறது. பொய்ச் சொல்லாதே,பொய்ச்சாட்சி சொல்லாதே. களவு செய்யாதே. விபசாரஞ் செய்யாதே, கொலை செய்யாதே, இப்படியாக அநேக காரியங்களைக் குறித்து சொல்லப்பட்டுள்ளதே. வசனத்தை வாசிக்கின்றவர்கள் எல்லோரும் சொல்லுவார்கள் நாங்களும் அப்படிதான் நடக்கின்றோம் என்று. ஆனால் நாம் அன்றாட வாழ்க்கையில் எத்தனை தடவை பொய்ச் சொல்லியிருப்போம். இதை போன்று செய்யாதே என்று சொல்லப்பட்டவைகளை நாம் சிந்தனையினாலும், பார்வையினாலும், பேச்சினாலும், செய்கையினாலும் செய்துக் கொண்டே வாழ்கின்றோம் என்பது உண்மை . அது போன்று ஸ்திரீகள் அல்லது மனைவிகள் வேதாகமத்தின்படி எப்படியிருக்க வேண்டு மென்று சொல்லப்பட்ட வசனங்களை நம்மால் உட்கொண்டு வாழ்க்கையில் செயலில் காட்ட முடிகின்றதா?
எபேசி.5:22,24 கூறுகிறது, மனைவிகளே உங்கள் சொந்த புருஷர்களுக்கு எந்தக் காரியத்திலும் கீழ்ப்படிந்திருங்கள் என்று. உங்களால் எந்தக் காரியத்திலும் கீழ்ப்படிந்து வாழ முடிகின்றதா?
(ii) 1தீமோத். 2:11 கூறுகிறது ஸ்திரீயானவள் எல்லாவற்றிலும் அடக்கமுடையவளாயிருந்து அமைதலை கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் 2:12ல் உபதேசம் பண்ணவும், புருஷன் மேல் அதிகாரம் செலுத்தவும் ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கிறதில்லை. அவள் அமைதலாயிருக்க வேண்டுமென்றும் கூறுகிறதே. நம்மால் இந்த வசனத்தை உட்க்கொண்டு வாழ முடிகின்றதா? சிந்தித்து பாருங்கள்
(iii) ரோமர் 7:2 கூறுகிறது புருஷனை உடைய ஸ்திரீ தன் புருஷன் உயிரோடிருக்குமளவும் நியாயப் பிரமாணத்தின்படியே அவனுடைய நிபந்தனைக்கு உட்பட்டிருக்கிறாள் என்று.. வசனத்தை அனுதினமும் வாசிக்கின்றவர்களே. தியானிக்கின்றவர்களே உங்களால் புருஷனுடைய நிபந்தனைகள் ஏற்றுக்கொண்டு வாழமுடிகின்றதா? இல்லை மறுப்பு சொல்லுகின்றவர்களாக காணப்படுகின்றோமா?
(iv) 1பேதுரு 3 :1,2 கூறுகிறது மனைவிகளே, உங்கள் சொந்த புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்திருந்திருங்கள் என்றும் அப்பொழுது அவர்களில் யாராவது திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதிருந்தால் உங்கள் கற்புள்ள நடக்கையைப் பார்த்து, போதனையின்றி மனைவியின் நடக்கையினாலேயே ஆதாயப்படுத்திக் கொள்ளப்படுவார்கள் என்று சொல்லப்பட்டுள்ளதே. பின்பு ஏன் நீங்கள் உங்கள் புருஷனை ஆதாயப்படுத்திக் கொள்ள முடியவில்லை. புருஷன் குடிப்பழக்கத்திற்கு போதைப்பொருளுக்கு அடிமையாயிருக்கிறாரென்றும், துன்மார்க்கமான வாழ்க்கை வாழ்கின்றவரென்றும் இப்படியாக பல காரியங்களுக்கு பலவிதமான காணிக்கை களையும், வேண்டுதல்களையும் மற்றவர்களுக்கு அனுப்பிக் கொண்ருக்கிறீர்களே! எப்பொழுதுமே மற்றவர்களின் ஜெப உதவி தேவை தான். ஆனால் அதற்கென்று கைகூலி கொடுக்க வேண்டுமா? சிந்தித்துப் பாருங்கள். ஆகையால் நீங்கள் வசனத்தை உணர்ந்து உண்ண பழக்கமுள்ளவர்களாக காணப்படுங்கள். உங்கள் புருஷனும் மனந்திரும்புவார். இன்னும் உங்கள் புருஷன் மனந்திரும்பவில்லை யென்றால் இந்த வசனத்தை உணர்ந்து உட்கொள்ள பழக்கப்படுத்தவில்லை என்பதுதான் உண்மை. யார் யார் வசனத்தை உட்கொண்டு பழக்கப்படுத்து கின்றார்களோ அவர்களுக்கு வசனம் கால்களுக்குத் தீபமாகவும் பாதைக்கு வெளிச்சமாகவும் காணப்படும் என்பது உண்மை
தீபம் :
தீபம் என்பதின் பொருள் தாவர எண்ணெய், நெய் ஆகியவற்றை ஊற்றி எரிக்கும் விளக்கு என்று தான் பொருள். இதில் ஊற்றப்படுகின்ற எண்ணெய் மிகவும் சுத்தமானதாக இருக்க வேண்டுமென்பது முக்கியமானது. தீபம் எல்லோருக்கும் வெளிச்சம் கொடுப்பதல்ல. ஒரு சிறு பகுதிக்கு மட்டுமே வெளிச்சம் கொடுக்கும். அப்படியென்றால் ஒருவன் தன் இருதயமாகிய பாத்திரத்தில் வசனமாகிய எண்ணெய்யை ஊற்றி எரிய செய்யும் போது அவன் கால்களுக்கு தீபமாக செயல்படும். அவன் தீமையான காரியங்களை அல்லது தவறான பாதையில் செல்லாமலிருக்கவும், தேவன் விரும்பாத இடங்களுக்கு செல்லாமலிருக்கவும் உணர்வைக் கொடுத்துக் கொண்டே இருக்கும். தீபம் கொளுத்திவிட்டால் எல்லா நாளும் தொடர்ந்து எரிந்துக் கொண்டே இருக்காது. திரும்ப திரும்ப எண்ணெய் ஊற்ற வேண்டும். அப்பொழுது தான் பலன் கொடுக்கும். அதுபோன்று கிறிஸ்தவ வாழ்க்கையில் ஒரு நாள் நான் மனந்திரும்பினவன் என்றல்ல. அனுதினமும் தீபம் ஏற்றி மனந்திரும்பினவர்களாக முடிவு பரியந்தமும் காணப்பட வேண்டும். தீபம் நம் வாழ்க்கையில் காணப்படுமானால் நன்மை எது, தீமை எது, தேவ நீதி ஏது என்று பகுத்தறியும் அறிவைப் பெற்றுக் கொண்டு ஒவ்வொரு நாளும் வஞ்சிக்கப்படாமலிருக்க திருவசனத்திற்கு முழுமையாக கீழ்ப்படிய ஜாக்கிரதையாகயிருப்போம்.
வெளிச்சம் :
வெளிச்சம் என்பதின் பொருள் ஒளிபொருள்களின் மீது பட்டுத் திரும்புவதால் கண்ணுக்குக் கிடைக்கும் தெளிவு அல்லது பிரகாசம். வெளிச்சம் அல்லது ஒளி என்பது இயேசு கிறிஸ்து. இந்த ஒளியை பின்பற்றுகிறவன் இருளில் நடவாமல் வெளிச்சத்தைக் கண்டடைவான் என்று யோ.8:12ல் வாசிக்கின்றோம். என் பாதைக்கு வெளிச்சம் என்று சொல்லும் போது நாம் அவருடைய வசனத்தை பின்பற்றும் போது நம்முடைய பாதை வெளிச்சமாயிருக்கும். அப்படியென்றால் நாம் சிந்திக்கிறதும், பேசுகிறதும், பார்க்கிறதும், செயல்படுத்துவதும் இன்னும் எல்லாக் காரியங்களிலும் கிறிஸ்து நம் வாழ்க்கையில் ஒளியாக இருப்பதால் தெளிவு பெற்றவர்களாகவும், மற்றவர்களுக்கு வெளிச்சம் கொடுக்கிறவர்களாகவும் காணப்படுவோம். தீபத்திற்கும் வெளிச்சத்திற்கும் வேறுபாடு உண்டு. தீபம் சிறிய வெளிச்சம். வெளிச்சம் எல்லாவற்றையும் தெளிவுபடுத்தும் பிரகாசம். நாம் வெளிச்சத்தில் நடக்கும் போது நன்மை , தீமையை சீக்கிரத்தில் தெளிவுபடுத்திக் கொள்ள முடியும். நமக்கும் கிறிஸ்துவிற்குமுள்ள ஐக்கியத்தில் அந்தரங்கமாக செய்கின்ற அல்லது இருளில் செய்கின்ற பாவம் வெளிச்சமாக காணப்படும். நாம் மறுபடியும் அந்தரங்க பாவங்களை செய்ய பயப்படுவோம். நாம் செய்கின்றதும், பார்க்கின்றதும், சிந்திக்கின்றதும் எல்லாமே வெளிச்சமாக இருக்கும். ஒரு வேளை நாம் அறிந்தும், அறியாமலும் பாவம் செய்வோமானால் அந்த பாவத்தை உணரக்கூடிய கிருபையை பெற்று கொள்ளுவோம். ஆகவே நாம் வெளிச்சத்திற்குள்ளாக இருக்க வேண்டு மானால் திருவசனத்தின்படி செய்கின்றவர்களாகவே இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நம் பாதை இருளாக அல்லது தெளிவு இல்லாததாக காணப்படும். பாவத்தை உணரக்கூடிய கிருபை கிடைக்காது. யாராவது நீங்கள் செய்வது பாவம் அல்லது தேவ நீதி அல்ல என்று சொல்லும் போது கோபம் தான் வரும். அது மட்டு மல்லாமல் சத்தியத்தை கேட்கும் போதும், வாசிக்கும் போதும் அதை உட்கொள்ளக் கூடிய அறிவு இல்லாமல் அவைகளெல்லாம் தவறானது. அது மற்றவர்களை குற்றப்படுத்துவதாக சொல்லுவது அல்லது எழுதுவது போன்று தோன்றும். இவர்கள் சத்தியத்தை எத்தனை முறை கேட்டாலும் கற்றாலும் ஒரு போதும் உணராதவர் களாகவே காணப்படுவார்கள். இவர்கள் ஆராதனைகளையும் சடங்காச்சரங்களையும் ஊழியர்களின் இச்சையான வார்த்தைகளையும் நம்பி காணிக்கைகளையும் பலவிதமான திட்டங்களில் சேர்வதையும், பேர் புகழுக்காக எதையும் கர்த்தருக்கென்று செய்யவும் விருப்பமுள்ளவர்களாக காணப்படுவார்கள். தங்கள் ஆத்துமாவிற்கு எது தேவையென்று உணராதவர்களாக ஆத்மீகத்தை உலகத்தோடு கலக்கின்றவர்களாக காணப்படுவார்கள்.
இன்றைக்கு சத்திய வெளிச்சம் மாத இதழ் அநேகருக்கு சத்துருவாகக் காணப் படுகின்றது. அநேகர் விரும்பி வாசிக்கவே மாட்டார்கள். ஆசீர்வாதங்களை முக்கியப்படுத்தி வரும் மாத இதழ்களை விரும்பி வாசிப்பார்கள். சிலர் வாசிக்காமலே குப்பையில் போடுவதுமுண்டு. அநேகர் இந்த இதழை மற்றவர்களுக்கு அறிமுகப் படுத்த கூட தயக்கம் காட்டுகிறார்கள். சில அஞ்சல்காரர்கள் மற்ற புத்தகத்தை வீட்டில் கொண்டு ஒவ்வொரு மாதமும் கொடுப்பார்கள். சத்திய வெளிச்சத்தை எங்கேயாவது கொண்டு போடுவதும் உதாசினப்படுத்துவதுமுண்டு. வேதம் கூறுகிறது கலா. 4:16 நான் உங்களுக்குச் சத்தியத்தைச் சொன்னதினாலே உங்களுக்குச் சத்துருவானேனோ என்று. அப்படியே இந்த இதழும் காணப்படுகின்றது. இதை ஆர்வத்துடன் அல்லது சத்தியத்தை அறியவேண்டிய தாகத்துடன் வாசிக்கின்ற வர்களுமுண்டு. அது அவர்களுக்கு கிடைத்த கிருபை என்று தான் சொல்ல வேண்டும். சத்தியத்தை அறிய வாஞ்சையாய்க் காத்துக் கொண்டிருக்கின்றவர்களே! உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமாகவும், என் பாதைக்கு வெளிச்சமாக காணப்பட; சங்கீதக்காரனாகிய தாவீது கூறுவது போன்று நாம் ஒவ்வொரு நாளும் சொல்லுவோம். உமது வெளிச்சத்தையும் உமது சத்தியத்தையும் அனுப்பியருளும் அவைகள் என்னை நடத்தி உமது பரிசுத்த பர்வதத்திற்கும், உமது வாசஸ்தலங்களுக்கும் என்னைக் கொண்டு போவதாக. அதற்காக நாம் திருவசனத்தை வாசிக்கின்றவர்களாகவும் கேட்கிறவர்களாகவும் தியானிக்கின்றவர்களாகவும் மட்டும் காணப்படாமல் அதன்படி செய்கின்றவர் களாகவும் காணப்பட ஜாக்கிரதையோடு காணப்படுவோம். அப்பொழுது நாம் மேலான பாக்கியத்தைப் பெற்று அவரோடு கூடஆளுகை செய்வோம். அதற்கு தேவன் தாமே நம் அனைவருக்கும் கிருபைபுரிவாராக. ஆமென்.
சகோதரி ஹெலன் ஷீன், கேரளா cell: 09947301633