கர்த்தருக்குப் பிரியமானவன், அவரோடே சுகமாய்த் தங்கியிருப்பான், அவனை எந்நாளும் அவர் காப்பாற்றி அவன் எல்லைக்குள்ளே வாசமாயிருப்பார்.
உபா. 33:12
தேவன் தம் ஆதி மக்களை ஆதாம், ஏவாளை உருவாக்கினபோது அவர்களுக்கு என்று ஓர் எல்லையை குறிப்பிட்டே அவர்களை கிழக்கே ஏதேன் என்னும் ஒரு தோட்டத்தை உண்டாக்கி தாம் உருவாக்கின மனுஷனை அதிலே வைத்தார். பூமி முழுவதும் ஏதேன் அல்ல. தேவன் சிருஷ்டித்த சகலவற்றிற்கும் அவைகளுக்கான எல்கை குறிப்பிடப்பட்டுள்ளது. சந்திரனை கால குறிப்புகளுக்காக படைத்தார் (சங். 104:19). பூமியின் எல்லைகளையெல்லாம் திட்டம் பண்ணினார் (சங். 74:17). ஏதேனிலே ஆதாமுக்கு ஒரு வேலையையும் கொடுத்தார். நிலத்தை பண்படுத்தவும், காக்கவுமே அவன் அங்கே வைக்கப்பட்டான். ஏதேனிலே ஏராளமான பழவகைகள் இருப்பினும், ஒரு குறிப்பிட்ட பழத்தை சாப்பிடக்கூடாது என்று அவனுக்கு ஒரு எல்லையையும், ஒரு வரையறையும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் எப்பொழுது ஆதாம் தனக்கான எல்கையைத் தாண்டினானோ அன்றே அவனுக்கு ஆசீர்வாத இழப்பு நேரிட ஆரம்பித்தது. இந்த இழப்பை தேடினவன் ஆதாமே ஆகும். தேவன் எதனையும் சாபமாக அளிக்கவில்லை. மீனுக்கு தண்ணீரே எல்கை. மீன் அதைத் தாண்டினால் அதற்கு கிடைப்பது மரணம் மட்டுமே. இதுபோன்றே வானத்திலுள்ள கிரகங்களெல்லாமே வானங்களின் ஒரு முனையிலிருந்து புறப்பட்டு அவைகளின் மறுமுனை வரைக்கும் சுற்றியோடுகிறது. அதினதின் உஷ்ணத்திற்கு (காந்திக்கு) மறைவானது ஒன்றுமில்லை (சங். 19:6). அக்கினி நட்சத்திரம் உஷ்ணம் கூட அதினதின் காலத்திற்குள்ளே வந்து போகின்றது. உஷ்ணத்திற்கும் எல்கை குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் எல்கை மீறப்படும் போது அழிவும் குழப்பமும் ஏற்படுகின்றது. இந்த உண்மையை தேவனைப் பிரியப்படுத்த விரும்புகின்றவர்கள் மட்டுமே அறிவார்கள். ஆனால் தன் சொந்த அறிவினால், அனுபவத்தினால், சுயநலமாய், ஆதாம் ஏவாளைப்போன்று தங்களுக்கான எல்கையை தாண்டிச் செல்பவர்கள் தங்கள் தங்கள் வாழ்வில் நஷ்டத்தையும் கஷ்டத்தையும் அடைகின்றார்கள் என்பதே உண்மை . தேவனால் குறிக்கப்பட்ட எல்கை என்பது இயற்கையான தல்ல, தற்காலிகமானதும் அல்ல. எல்கை தேவனாலேயே நிர்ணயிக்கப்பட்டதாகும். It is Supernatural. இதனை மீறும் போது தேவதண்டனை மட்டுமே கிடைக்கப்படும் என்பதையும் அறிந்திடுவோமாக. இயேசு தாமே கூறியுள்ளார், நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால் அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று மேய்ச்சலைக் கண்டடைவான் (யோவா. 10:9). ஆனால் தேவனை அறியாத புறஜாதி மக்களோ கிரகங்களின் கால குறியீட்டுகளை தங்களுக்கான பாணியிலே மாற்றிக் கொள்கின்றார்கள். வானத்தின் அடையாளங்களாலே புறஜாதிகள் கலங்குகிறார்கள். (ஏரே. 10:2) அவர்கள் கலங்குகிறார்களே என்று சொல்லி தேவனை அறிந்தவர்களும் அவர்களைப்போன்று அவைகளாலே கலக்கம் அடையக்கூடாதே. புறஜாதிகளுடைய மார்க்கத்தைக் கற்றுக் கொள்ளக்கூடாதே. ஆனால் இன்று தேவனை நன்கு அறிந்தவர்கள், விசுவாசிகள், ஊழியர்கள் கூட அநேகர் தேவன் நிர்ணயித்த எல்கையை தாண்டி விடுகின்றார்களே. புறஜாதிகளைப் போன்று நாள் நட்சத்திரம், ஜாதகம், வாஸ்து, இலக்கம் எண் அதிகாரம் பார்க்கின்றவர்களாய் எல்லையைத் தாண்டிச் சென்று அழிவின் பாதையில் போய்க் கொண்டிருக்கின்றார்களே. இந்த தெய்வீக எல்கைகுறியை மாற்றியமைக்கின்றவன் தேவனை கனவீனப்படுத்துகின்றபடியால் அவன் நித்திய ஆக்கினை அழிவுக்கு உட்படுத்தப்பட்டுவிடுகின்றான். ஆதாம், ஏவாள் நிரந்தரமாய் ஏதேனிலிருந்து விரட்டப்பட்டு விட்டார்களே. ஆண்டவராகிய தேவன் எந்த மனிதனுக்கும் எதிரானவர் அல்ல. மனிதனே தேவனை எதிரியாக்கிக் கொள்கின்றான். ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்றே தேவன் விரும்பி நம்மேல் நீடிய பொறுமையாயிருக்கிறார். ஆனால் மனுஷனோ, தேவனின் பொறுமையை, தனக்கு சாதகமாக்கிக் கொண்டு தேவன் நிர்ணயித்த எல்கையை தாண்டியே ஓட விரும்புகின்றார்கள். குடி, புகைபிடித்தல், விபச்சாரம் போன்றவற்றை விட்டுவிடாமல் ஊழியங்களையும் செய்து வருகின்றார்கள். ஆனால் தேவனோ தம் எல்கைக்குள் தன்னை அடக்கினவர்களாய் வாழ்ந்து தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும் மிகமிக சமீபமாகவே இருக்கின்றார். ஏசாயா தீர்க்கதரிசி அழைத்து கூறுகின்றது யாது? (ஏசா. 26:20) என் ஜனமே நீ போய் உன் அறைகளுக்குள்ளே பிரவேசித்து உன் கதவுகளைப் பூட்டிக்கொண்டு சினம் கடந்துபோகுமட்டும் கொஞ்ச நேரம் ஒளிந்துகொள் என்று. மனுஷர்களின் அக்கிரமம், பாவம், எல்கையை தாண்டி பூமியிலே பெருகினது என்றும் மனிதனின் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் எல்கையை கடந்து நித்தமும் பொல்லாததே என்றும் கண்டு தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காக கர்த்தர் மனஸ்தாபப்பட்டார். அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது என்பதினாலேயே 6000 ஆண்டுகளுக்கு முன்பாக தேவன் ஜலப்பிரளயத்தினால் மக்கள் யாவரையும் அழிக்கையில் அக்காலத்திலே இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்த நோவாவையும் அவன் குடும்பத்தையும் இரட்சிக்கவே பேழை என்ற மற்றுமொரு எல்கைகளுக்கான அறைகளை செய்யக் கட்டளையிட்டார். தேவன் நோவாவை பேழைக்குள்ளே அடைத்துவைத்து கதவை தேவன் தாமே பூட்டினார். இந்த எல்கைக்குள்ளான அடைப்பு உலக பழக்கவழக்க பாவங்களுக்கு 100% விடுவிக்கப்பட்டதாகும். இந்த எல்கை அடைப்பு தேவன் நோவா பேரில் காண்பித்த தெய்வீக அன்பின் காரணம் மாத்திரமே. நோவாவை தேவன் தாமே பேழைக்குள்ளே அழைத்துச் சென்றுள்ளார். பேழைக்குள்ளே தேவனே நோவாவோடு சகல நாட்களிலும் காணப்பட்டார், வாசஞ்செய்தார். உலகளாவிய எந்த அசுத்தங்களும், பாவங்களும் எல்லையைத் தாண்டி பேழைக்குள்ளே அவனிடம் அண்டிடவே கூடாததாயிருந்தது. பெருவெள்ளம் பேழையையும் அதற்குள்ளேயிருந்த அவன் குடும்பத்தையும் பூமிக்கு மேலாக பரலோகத்தை நோக்கி பொங்கச் செய்ததே. வீசிய பெருங்காற்றும் அந்த பேழையை தேவன் நிர்ணயித்த எல்கைக்குள்ளே அவருடைய பாதையிலேயே வழிநடத்திச் சென்றிட்டதே. (அரராத் மலையை நோக்கி) பேழைக்கு வெளியே அழிவு, நாசம், நஷ்டம். ஆனால் பேழைக்குள்ளே சந்தோஷம், சமாதானம், வெளிச்சம், இளைப்பாறுதல். தேவன் அடைத்த அடைப்பிலிருந்து நோவா விரும்பினாலும் தான் வெளியே வரக்கூடாததாய் காணப்பட்டதே. தேவன் தம் மக்களுக்கு நிர்ணயித்த எல்கைக்குள்ளே என்றும் சந்தோஷம் இளைப்பாறுதல் மட்டுமே ஆகும். தேவன் அடைத்ததை மனிதன் எவனும் திறக்கக் கூடாதே. 10 கன்னிகைகள் சம்பவத்திலும், 5 புத்தியுள்ளவர்கள் ஆண்டவரோடு கூட கலியாண வீட்டிற்குள் பிரவேசித்துள்ளார்கள். கதவும் அடைக்கப்பட்டது. பின்பு மற்ற கன்னிகைகளும் வந்து ஆண்டவரே! ஆண்டவரே! எங்களுக்கு திறக்க வேண்டும் என்றார்கள். அதற்கு அவர் உங்களை அறியேன் என்று கூறினாரே. இதே நிலைதான் இக்காலத்து மக்களுக்கும் தேவன் நிர்ணயித்த எல்கையை மீறுபவர்களுக்கு நேரிடும் என்று அறிந்திடுவோமாக. தேவன் நிர்ணயிக்கும் எல்கையை தாண்டி ஜீவனம் செய்து ஊழியம் புரியும் எவருமே புத்தியில்லாதவர்களே ஆவர், அவர்களுக்கு நித்திய ஆக்கினை மட்டுமே முடிவு. யோனா தீர்க்கத்தரிசியை எடுத்துக் கொள்ளுங்கள். தேவன் அவனுக்கு கட்டளையிட்டதை மீறி எதிர்மறையாக செயல்பட்டபோது தேவன் அவன் பேரில் கொண்ட அன்பின் காரணமாக அவனுக்கு ஒரு இறுக்கமான ஒரு எல்கையை ஏற்படுத்த ஒரு பெரிய மீனுக்குக் கட்டளையிட்டார். 3 நாட்கள் மீன் வயிற்றுக்குள்ளே, மூச்சுவிடக் கூட முடியாமல், மீன் வயிற்றில் உண்டாகும் ஜீரண அமிலத்தோடே போராடுகின்றவனாய் உஷ்ணமான அறைக்குள்ளே, பாவ உணர்வு கொண்டு ஜெபிக்கின்றான். அந்த மீன் கடலின் ஆழங்களுக்குள்ளும் கடலுக்குள்ளே உள்ள மலைகளின் தாழ்வாரங்களுக்குள்ளும் அவனை அழைத்துச் சென்றது. கடற்பாசி கூட அவனைச் சுற்றி நெருக்கிற்று. இந்நிலமையிலும் தேவன் அவன் ஜெபத்தைக் கேட்டு அவனை விடுவித்தார். எல்லையை மீறுபவனுக்கு துக்கம், துன்பம் நெருக்கம். ஆனால் உத்தமனுக்கோஆறுதல், சமாதானம், இளைப்பாறுதல். தேவனிடத்தில் கிட்டிச் சேருவதற்கு எப்பொழுதுமே தேவன் மனிதர்களிடம் எந்த மேலான நிலமையினையும் எதிர்பார்க்கவில்லையே. உலகப்பிரகாரமான எந்த ஞானத்தையும், கனத்தையும், தகுதியையும் தேவன் மனிதர்களிடம் எதிர்பார்க்கவில்லையே. தேவனிடம் கிட்டிச் சேர அதற்கான தகுதியுள்ள இடத்திலிருந்து, ஐக்கியத்திலிருந்து அவன் தேவனை அழைக்க வேண்டும் என்ற எந்த நிபந்தனையும் தேவன் விதிக்கவில்லையே. தாவீதுக்கு தேவன் தாமே அரணாக இருந்து வந்தபோதிலும் தனக்கான தேவ வரம்பை / எல்கையை மீறுகின்றவனாக தன் ஜனத்தின் தொகையை எண்ண உத்தரவு செய்தான். இதனால் இஸ்ரவேலர் 70000 பேர் அழிக்கப்பட்டார்கள். தாவீது பாவ உணர்வடைந்து நான் அல்லவா பாவஞ்செய்தேன். இந்த ஆடுகள் என்ன செய்தது என்று பிராத்தித்த போது தேவன் அவனை ஒரு சாதாரண போரடிக்கிற களத்திலே சந்தித்தார். அந்த இடத்தில்தானே தாவீது தேவனுக்கு பலிபீடம் கட்டி, அங்கே உள்ள உழவு மாட்டினையே தகனபலியாக செலுத்தினான். விறகிற்காக உழவு உருளைகளையே பயன்படுத்தினான். தேவன் அதனை அங்கிகரித்து அங்கேயே அவனை ஏற்றுக்கொண்டதோடு, பிற்காலத்தில் அந்தஸ்தலமே எருசலேம் தேவாலயம் கட்டும் ஸ்தலமாயிற்று. இதனால் தேவனிடம் கிட்டிச் சேர அதற்கான பிரத்தியேக ஆலயமோ, சபையோ, கூடுகையோ ஐக்கியமோ தேவையில்லை. எந்த ஊழியரின் உதவியையும் நாட வேண்டிய அவசியமில்லையே. இருந்த இடத்திலே, வீட்டிலேயே உள்ள நிலமையிலேயே நம் பாவங்களை அறிக்கை செய்தவர்களாக ஆண்டவரின் இரட்சிப்பு என்னும் பேழைக்குள் நுழைந்திடலாமே. மேலும் தேவனுக்கான பணிபுரிய, அந்த நபர் ஜனங்களிடையே பிரபலமாகவும், கனத்திற்குரியவராகவும் இருத்தல் வேண்டும் என்றும் அவசியமல்ல. (1நாளா. 4:23) ராஜாவின் வேலையை விசாரிக்கிறதற்காக சில குயவர்கள் அழைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களின் தொழில் மண்பாண்டம் செய்வது. அவர்கள் பயன்படுத்தியது சாதாரண களிமண் மாத்திரமே. இவர்கள் நகர வெளிப்புறங்களிலே செடிமரம் நிழல்களிலும், கழிவுகுழாய் வழிகளிலும் குடியிருக்கிறவர்களே. ஆனால் ராஜாவால் அழைக்கப்பட்டு அரண்மனையிலே மண்பாத்திரங்களை செய்து கொடுத்து வந்தார்கள். ராஜா இவர்களுடைய குடியிருப்பையோ வாழ்வாதாரத்தையோ காணவில்லை. சாதாரண மக்களாயிருந்தாலும், கனத்துக்கு புறம்பானவர்களாயிருந்தாலும் ராஜாவின் பணியின் சொந்தக்காரராய் அங்கிகரிக்கப்பட்டிருந்தார்களே. அதுபோன்றே நம் ஆண்டவருக்கான சேவையை செய்கின்றவர்கள், படித்தவர்களாக, பட்டம் பெற்றவர்களாக உயர் ஜாதியினராக வரம் பெற்றவர்களாக, நல்ல குடும்ப அந்தஸ்து பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்ற அவசியமல்ல. சாதாரண கூலித் தொண்டனாகவே இருந்து சாதாரண சிறு பணியையே தேவராஜ்ய பணியாக செய்ய யாவரும் அழைக்கப்படுகின்றோம்.தேவனுடைய சித்தத்தை மட்டுமே செய்கின்றவர்களாய் காணப்பட வேண்டும். தேவனுக்குப் பிரியமானவர்களாகவும் காணப்பட வேண்டும். தங்களைத் தாங்கள் ஞானிகளாக, நீதிமான்களாக பாவித்துக் கொள்கின்றவர்கள் பரலோக வாசலை தேவன் தாமே அடைத்தப்பின் தங்களுக்குத் திறக்க வேண்டும் என்று கெஞ்சுகிறவர்களாய் காணப்படுகின்றவர்களாவர். அவர்கள் எவ்வித இரக்கமும் இன்றி நிரந்தரமாய் கைவிடப்படுவார்களே. ஆகையால் தேவன்தாமே அவ்வப்போது நிர்ணயிக்கின்ற எல்கைகளுக்குள்ளே அடங்கி, ஒடுங்கி ஆண்டவருக்காய் பாவங்களற கழுவப்பட்டவர்களாய் வாழ்ந்திடுவோமாக. இஸ்ரவேல் மக்கள் எகிப்தினை விட்டு வந்தபின் முதல் முதலாவதாக தேவன்தாமே ஒரு கூட்டுப் பெயருடன் தம்மை மக்களுக்கு வெளிப்படுத்தினதை யாத். 15:26 யில் வாசிக்கின்றோம். நானே உன் பரிகாரியாகிய கர்த்தர். I am the Lord who heals you -Jehovah Rapah. இன்று இந்த வாக்குத்தத்தத்தை எல்லா ஊழியர்களும் சாதாரணமான முறையிலே தம் மக்களுக்கு அறிவித்து, அவர்களின் பாராட்டுதலையும் அதன் பெயரிலே காணிக்கைகளையும் பெற்று விடுகின்றார்கள். இது சாதாரணமாக உபயோகிக்கப்படும் வாக்குத்தத்தமாகாது. இது சில வரம்பு, எல்கைகளோடு நிர்ணயிக்கப்பட்ட வாக்குத்தத்தமாகும். யாத். 15:22யில் இஸ்ரவேல் ஜனங்கள் மகிழ்ச்சியாய், வெற்றியோடு சிவந்த சமுத்திரத்தை கடந்துள்ளார்கள். உடன்தானே அவர்கள் சந்திக்க நேரிட்டது சூர் வனாந்திரம். தேவன்தாமே அவர்களை அங்கே 3 நாட்கள் தண்ணீரில்லாமல் நடக்கப்பண்ணினார். இதுவே தேவன் நிர்ணயித்த எல்கையின் ஆரம்பம். பின்பு அவர்கள் மாரா வந்த போது அங்கே தண்ணீர் காணப்பட்டது. ஆனால் அது கசப்பாயிருந்ததினால் குடிக்கக் கூடாததாயிருந்தது. இது எல்கையின் மறுமுனை. தேவன் தம் ஜனங்களை சோதித்து அறிய விரும்புகின்றார். பலத்த கைகளோடு 430 ஆண்டுகளுக்குப் பின்பு விடுவிக்கப்பட்டவர்கள் தேவனுடைய ஆளுகையை, தேவன் விதிக்கும் எல்கைக்குள் வாழ விரும்புகின்றார்களா என சோதித்து அறிய விரும்புகின்றார். இதுவரையிலும் எண்ணக்கூடாத அற்புதங்களை கண்டவர்கள், இப்போது முறுமுறுக்கக் தொடங்கினார்கள். என்னத்தை குடிப்போம் என்று வாதாடுகின்றார்கள். வாக்குவாதமும் நேரிடுகிறது. அதன் விளைவாக அந்த இடத்திற்கு மாரா என்று பெயரும் வழங்கப்படுகின்றது. தேவனுடைய பாதையிலே மாரா அவசியம் தானா? பாலும் தேனும் ஓடுகிற கானானின் பாதையிலே மாராவுக்கு என்ன அவசியம்? தேவனிடம் மோசே மன்றாடுகின்றான். தேவனுடைய பதில் ஒரு சாதாரண சிறுகட்டளை மாத்திரமே. இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாக அவர்களை சோதிக்கும்படியாகவே தேவன் இந்த சிறு கட்டளையினை ஆணையிடுகின்றார். முறுமுறுத்து வாக்குவாதம் செய்த ஜனங்களுக்கு முன்பாக ஒரு மரத்தின் துண்டு ஒன்று அந்த கசப்பு தண்ணீரில் போடப்படுகின்றது. உடன்தானே கசப்பான தண்ணீர் மதுரமாகின்றது. அங்கே தானே ஜனங்களை சோதிக்கும்படியாக ஒரு நியமத்தையும் ஒரு கட்டளையையும் ஆண்டவர் இடுகின்றார். அதனை ஜனங்கள் கவனமாய்க் கேட்டு கர்த்தரின் பார்வைக்கு எவ்வித முறுமுறுப்பும் இல்லாமல் செம்மையானவைகளைச் செய்து ஆண்டவரின் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால் மாத்திரமே கர்த்தர் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் அவர்களுக்கு வரப்பண்ணேன், அவரே ஜனங்களுக்கு பரிகாரியாகிய கர்த்தர் என்று அறியப்படுகின்றார் என்று விளம்பப்பட்டது. ஆண்டவராகிய தேவன் எப்பொழுதுமே பரிகாரியாகிய கர்த்தரே. ஆண்டவரின் கட்டளைகளுக்கு செவிகொடுத்து அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், அதாவது ஆண்டவர் ஏற்படுத்தியுள்ள எல்கைக்குள்ளே அடங்கி முறுமுறுப்பு இல்லாமல், மனப்பூர்வமாய் ஆண்டவரின் கட்டளைகளுக்கு செவிகொடுத்து நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், குணப்படுத்தக் கூடாத கொடூர வியாதிகள், மருத்துவர்களால் கைவிடப்பட்ட வியாதிகள், எகிப்தியர்கள் மேல் வரப்பண்ணப்பட்ட வாதைகள், ஆபத்துகள், நஷ்டங்கள், கஷ்டங்கள், அழிவு, நாசம், மோசம், மரணம், விபத்து எதுவும் ஆண்டவரின் பிள்ளைகளுக்கு நேரிடாது என்பதே தேவனின் வாக்கு ஆகும். இருதயத்திலே எவ்வித கசப்பும், யார் மீதும் எந்த வெறுப்பும் இல்லாதவர்களுடைய வாழ்க்கையே மதுரமான வாழ்வாகும். அதற்காகவே ஆண்டவர் சிலுவை மரத்திலேயே மரித்து நமக்கு இனிமையான வாழ்வை சம்பாதித்து அளித்துள்ளார். அவரே அந்தமரம். மனிதர்களை பரிகரிக்கும் கடைசி சத்துரு மரணம். அதுவும் இல்லாமல் நித்திய மகிழ்ச்சியும் மகிமையுமே அவருடையவர்களுக்கு வழங்கப்படுகிறது. அன்னார்களின் வாழ்க்கையில் மாரா என்பதே கிடையாது. இவர்களுக்கு என்றுமே அவர் பரிகாரியாகிய கர்த்தரே ஆவார். அதனால் ஆண்டவர் அளித்துள்ள மனந்திரும்புதல் என்ற எல்கையை மனப்பூர்வமாய் ஏற்று அதற்கு உட்படுத்திக் கொள்வோமாக. ஆண்டவரும் நம்மோடு நம் சகல நாட்களிலும் வாசஞ்செய்கின்றவராயிருக்கின்றார். முந்தின ரசத்தைக் காட்டிலும் பிந்தின ரசம் மிகமிக மதுரமானதே. ஆண்டவர்தாமே நம் அனைவரையும் அதிகமதிகமாய் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
சகோ. பிலிப் ஜெயசிங்.